மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், விற்பனைக்காக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை சட்டவிரோதமாக வைத்திருந்த 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 7.600 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தினேஷ் (24). தமீம் அன்சாரி (26). கார்த்திக் (37).சித்திக் ராஜா (24). பெரியசாமி (25). அய்யனார் (22).கார்த்திக் (20). மற்றும் அருண்குமார் (19). ஆகியோர் என காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள்மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றச்செயலில் தொடர்புடையவர்களின் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 91760 79100 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















