மதுரை: மதுரை மாவட்ட அனைத்து உட்கோட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (14.09.2026)-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவும் அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலங்களும் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் போது பொது மக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, இன்று (02.09.2026)-ம் தேதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பாளர்கள், சிலைகள் நிறுவக்கூடிய குழுவினர் மற்றும் பிரதிநிதிகளுடன் மேற்படி விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சிலைகள் நிறுவுதல் மற்றும் சிலைக்கரைப்பு ஊர்வலம் நடத்துவது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊர்வலம் மேற்கொள்ளுதல், காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் அனைத்து அரசியல் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பு வழங்கி, அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் விழாவினை நடத்துமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















