சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் வனப்பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கும்பல் ஊடுருவியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. கடந்த நவம்பர் 15-ஆம் தேதி வனப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை தகவலைத் தொடர்ந்து, கொளத்தூர் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பரவி பீதியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில், கொளத்தூர் வனப்பகுதியில் பவாரியா கும்பல் ஊடுருவியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவாரியா என்ற பெயர் வடஇந்தியாவில் உள்ள ஒரு சமூகத்தின் பெயராகும். அந்தப் பெயரைச் சேர்ந்த சில குற்றக் கும்பல்கள் கடந்த காலங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற அத்தகைய கொள்ளைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் உருவாக்கப்பட்டது.
தற்போது சேலம் கொளத்தூர் பகுதியில் பவாரியா கும்பல் ஊடுருவியதாகப் பரவும் தகவலுக்கு ஆதாரம் இல்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய நடமாட்டம் தென்பட்டால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















