கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை சென்று சிகிச்சை பெற்று திரும்பிய சின்னப்பன் என்பவரிடம் வழிப்பறி செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை 2-ஆம் தேதி இரவு பர்கூரில் பேருந்தில் இருந்து இறங்கிய சின்னப்பனிடம், “வீட்டில் இறக்கி விடுகிறேன்” என்று கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர், எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள தென்னந்தோப்புப் பகுதியில் அவரை கீழே தள்ளிவிட்டு, அவரது Vivo செல்போன், ரூ.1,200 ரொக்கம் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னப்பன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பர்கூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட செல்போன், ரூ.1,200 ரொக்கம், வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.



















