ஈரோடு: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள மலையடிவார தோட்டப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை அவ்வப்போது மான், கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுத்தையை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதலாக இரண்டு கூண்டுகள் வைக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், ஏற்கனவே பலமுறை கூண்டுகள் வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை என தெரிவித்த பொதுமக்கள், உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு மற்றும் வெப்பிலி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுத்தை பிரச்சினை குறித்து வனத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். சிறுத்தையால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தமிழ்நாடு வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

N.செந்தில்குமார்




















