தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த (07.06.2026) அன்று சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது, தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மொத்தம் 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



















