கன்னியாகுமரி: கன்னியாகுமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், தொடங்கி வைத்தார். பணிச்சுமை அதிகம் உள்ள காவல் துறையினரின் உடல்நலனை தொடர்ந்து கண்காணித்து, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நோக்கில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி பரிசோதனைகள், இரத்தப் பரிசோதனை, கண் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என மொத்தம் 168 பேர் கலந்து கொண்டு தங்களது உடல்நிலையை பரிசோதித்துக் கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தினந்தோறும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவல் துறையினரின் உடல்நலனை பாதுகாக்க இது போன்ற மருத்துவ முகாம்கள் மிகவும் அவசியமானவை என முகாமில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மருத்துவ முகாம் மூலம் காவல்துறையினரின் நலனில் மாவட்ட காவல் நிர்வாகம் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




















