திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (02.06.2026) கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் சோதனைச் சாவடி மற்றும் கந்திலி காவல் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வெளிமாநில மதுபானங்கள், கள்ளச்சாராயம் மற்றும் இயற்கை கனிமங்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்ய காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சோதனைச் சாவடி மற்றும் காவல் நிலைய வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தொடர்ந்து, கந்திலி காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் அலுவல் ஆவணங்களை ஆய்வு செய்து, அவற்றை முறையாகப் பராமரிக்கவும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.



















