மதுரை: மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பள்ளகருப்பசாமி கோவில், இந்த கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பின் இன்றும் நாளையும் கிடா வெட்டு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது கோவிலின் இடம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த அழகர், கண்ணன் என்ற இரு குடும்பத்தினர் கோவில் கோடாங்கி ராஜா என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. கோடாங்கியை தாக்கியவரை கைது செய்ய கோரி, கோவிலுக்கு கிடா வெட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள் மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை குறுக்கே போட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேசன் தலைமையிலான போலீசார் சாலை மறியலை கைவிட வைத்துவிட்டு பக்தர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கிடா வெட்டு திருவிழாவை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும், தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















