தமிழக அரசின் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான “முதல்வரின் சிறப்புப் பணிக்கான பதக்கங்கள்” மொத்தம் 665 காவல் அதிகாரிகள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் திரு. விஜய் பதக்கங்களை வழங்கி கௌவுரவித்தார். தமிழ்நாடு காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறை, தடய அறிவியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த உயரிய விருதைப் பெற்றனர்.
விழாவிற்கு முன்னதாக முதல்வருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற அதிகாரிகளை வாழ்த்தி பாராட்டினர்.




















