திண்டுக்கல்: புறநகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பாலகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், போலீசாரைக் கண்டு வாகனத்தை விட்டு தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர், அதில் ரூ.2,50,000 பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் மற்றும் துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




















