கரூர்: வருகின்ற (23.04.2026) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரண் பிரசாத், IPS அவர்கள் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. குளித்தலை உட்கோட்ட காவலர்களுக்கு சுபசக்தி கல்லூரியிலும், கரூர் நகர மற்றும் ஊரக உட்கோட்ட காவலர்களுக்கு VRS திருமண மண்டபத்திலும் தனித்தனியாக பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில், வாக்குப்பதிவு நாளுக்கு முன் 72 மணி, 48 மணி மற்றும் 24 மணி நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு நாளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் காவலர்களின் கடமைகள் மற்றும் வாக்குச்சாவடி சுற்றியுள்ள 100 மற்றும் 200 மீட்டர் பகுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் விழிப்புடன் செயல்பட்டு, ஒதுக்கப்பட்ட பணிகளை தேர்தல் விதிமுறைகளின்படி சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.




















