தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருப்பது, பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, அவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அவசரகாலங்களில் உதவி பெறுவதற்கான சேவை எண்களான 1091 – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண், 100 – காவல்துறை அவசர உதவி எண், 181 – மகளிர் உதவி எண், 1098 – குழந்தைகள் உதவி எண் மற்றும் 1930 – சைபர் கிரைம் புகார் உதவி எண் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.




















