தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பாலியல் தொல்லைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டியதன் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், அவசர காலங்களில் உதவி பெறுவதற்கான 100 (காவல்துறை அவசர உதவி எண்), 181 (மகளிர் உதவி எண்), 1098 (குழந்தைகள் உதவி எண்) மற்றும் 1930 (சைபர் குற்ற புகார் உதவி எண்) ஆகிய சேவை எண்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, குற்றங்கள் தொடர்பான தகவல்களை தயக்கமின்றி காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




















