திண்டுக்கல்: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கொண்டாடப்பட பட்டதை முன்னிட்டு, திண்டுக்கல், பழனி மற்றும் கொடைரோடு இரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
திண்டுக்கல் இரயில்வே காவல் ஆய்வாளர்.கோமதி உத்தரவின் பேரில் இந்த சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. திண்டுக்கல் இரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளர். பாஸ்கரன் தலைமையில் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பழனி இரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளர். திருமலை ராஜா தலைமையில் பாதுகாப்பு சோதனை நடைபெற்றது. மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொடைரோடு ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அருணோதயம் தலைமையில் சோதனைகள் மேற் கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் ரயில் தண்டவாளங்கள் மற்றும் இரயில் நிலைய வளாகம் முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள் மற்றும் கொண்டு செல்லும் பொருட்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. மேலும், இரயில் நிலைய வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
சுதந்திர தின விழாவின்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது அமைதியைப் பேணுதல் மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இந்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், பயணிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள், பொருட்கள் அல்லது கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் பைகள் குறித்து உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















