திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் வகையில் திருப்பத்தூர் நகரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, திருப்பத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றது. தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கிய அணிவகுப்பு, பேருந்து நிலையம் வழியாக புதுப்பேட்டை ரோடு ரவுண்டானா மற்றும் பேருந்து பணிமனை வரை நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் இணைந்து சுமார் 100 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கை அளித்தனர்.




















