மதுரை: அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழாசுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் (UNEP) முன்னெடுக்கப்படும் இந்த நாள், பூமிப்பந்தையும் இயற்கை வளங்களையும் காக்க உலகளாவிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. புவி வெப்பமயமாதல், பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் காடழிப்பு போன்ற அவசர சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்குகிறது. தனிநபர், சமூக அமைப்புகள், மற்றும் அரசாங்கங்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நடுதல், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட இது தூண்டுகோலாக அமைகிறது.
இயற்கை வளங்களைச் சேமித்து, எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதனைத்
தொடர்ந்து, உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் வகையில் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, வீரபாண்டி அரசு தொடக்கப் பள்ளியில்
சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மதுரை மகாத்மா மாண்டிசோரி பள்ளி, வீரபாண்டி பள்ளியினர் இணைந்து சுற்றுச்சூழல் தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
விழா ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியர் க.செல்வ குமரேசன் செய்து, புவி வெப்பமயமாதல் பற்றியும் அதன் விளைவாக ஏற்படும் பருவ கால மாற்றங்கள் பற்றியும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுவதன் அவசியம் பற்றி, மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் எடுத்துரைத்தார்.பின்னர், மகாத்மா பள்ளி சாரணர் இயக்க மாணவர்கள் வீரபாண்டி பள்ளியிலும் கிராம பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் ஆசிரியர்கள் ஜேக்கப், கவிதா, நாகேஸ்வரி, கங்கா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















