மதுரை: தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள் பேருந்து நிறுத்தங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்த நிலையில்,
முதல் கட்டமாக 717 அரசு மதுபான கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு தற்போது வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை அகற்றி உள்ளது இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நேற்று மதியம் உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளது.
ஆனால் , மதுரை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் தனியார் மதுபான கடைகள் தற்போது வரை அகற்றப்படாத நிலை உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மதுபான கடையானது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது .
இதன் அருகிலேயே வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் மற்றும் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி இந்த பள்ளியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ,கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு மதுபான கடையை தாண்டி தாங்கள் படிக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . மேலும் ,மதுபான கடை அருகில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் ஆஞ்சநேயர் திருக்கோவில் கோபாலகிருஷ்ணன் கோவில் சிவன் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களும் உள்ளது மதுபான கடைகளுக்கு வரும் மது பிரியர்களால் இந்த பகுதிகளில் தினசரி சமூக விரோத செயல்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது , தமிழக அரசு மேற்கொண்டு உள்ள மதுக்கடைகள் அகற்றும் நடவடிக்கைகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டு வரும் நிலையில் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தனியார் மதுபான கடையால் பொதுமக்கள் பெண்கள் பள்ளி மாணவிகள் ஆன்மீக வாதிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது ஆகையால், மதுரை மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தனியார் மதுபான கடையை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர். இரண்டு வாரங்களுக்குள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகள் அகற்றப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில் ,
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லை என்றால், பொதுமக்களை ஒன்று திரட்டி தனியார் மதுபான கடை முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















