திண்டுக்கல்: தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையினரிடையே பரப்பும் நோக்கில், நிலவை அகாடமி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பு துவக்க விழா நிலக்கோட்டை துரைச்சாமிபுரத்தில் உள்ள ஆசிரியர் ராமு – பாக்யலட்சுமி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, 1977 நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. மு. சாதிக் அலி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில், நிலக்கோட்டையின் பெருமையும், தமிழக அரசின் சர்க்கரைத் துறை ஆணையருமான கண்ணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, இலவச சிலம்பப் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ வாழ்த்துரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் யூகேந்திரன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிலம்பாட்ட நிகழ்ச்சியை நடத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர். பயிற்சி ஆசிரியராக எம். செந்தில்குமார், அமேஜிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ஆத்தூர் அவர்கள் கலந்து கொண்டு, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளித்தார். பயிற்சி வழங்கிய ஆசிரியர் எம். செந்தில்குமார், 1977 நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள் சார்பில் காமராஜ், பாலசந்திரபோஸ், மோகன்ராஜ், பாண்டியராஜன், சதீஷ்குமார் மற்றும் சரவணக்குமரன் ஆகியோர் குருபூஜை செய்து கௌரவித்தனர்.
மேலும், பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் இரா. கண்ணன், நிலவை அகாடமி சார்பில் நினைவு பதங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியின் நிறைவில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மா. கண்ணன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், நிலவை அகாடமி ஒருங்கிணைப்பாளர் ஹரிகாமேஷ் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் இந்நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நிலவை அகாடமி மற்றும் 1977 நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















