திருப்பத்தூர்: பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவசர காலங்களில் உடனடி உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு பாதுகாப்பு சூழலை உறுதி செய்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தவும் இந்தப் படை முக்கிய பங்காற்றி வருகிறது. அத்துடன், பெண்களுக்கான உதவி எண்கள், சட்ட பாதுகாப்பு உரிமைகள் மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வையும் பொதுமக்கள் மற்றும் மாணவிகளிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் மாணவிகளின் நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




















