இராமநாதபுரம்: ராமேஸ்வரம் சின்னவம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர், ராமேஸ்வரம் நகர் போலீசில் புகார் அளித்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், முதல்வரின் தனிப்பிரிவிற்கு அவரது தாத்தா இரு முறை புகார் அளித்தார். இதையடுத்து கணேஷ் ராஜ் வழக்கு விசாரணையை ராமநாதபுரம் எஸ்.பி திரு.கார்த்திக் துரிதப்படுத்தினார்.
கணேஷ்ராஜின் மிக நெருங்கிய நண்பர்களிடம் தனிப்பிரிவு போலீசார் துரிதமாக விசாரித்தனர். இதில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கணேஷ் ராஜை அடித்து கொலை செய்து செம்மமடம் அருகே ரயில் பாதை பின்புறம் புதைத்ததாக வாக்கு மூலம் அளித்தனர்.
இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி திரு.கார்த்திக் தலைமையில் ராமேஸ்வரம் தாசில்தார் திரு.மார்ட்டின் ராஜ் முன்னிலையில் கணேஷ்ராஜ் உடல் எலும்பு கூடாக இன்று மீட்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக முத்து, சேரன், அஜித், மைக்கேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் சதீஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


















