திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகல் நகரைச் சேர்ந்த சௌகத் அலி (60). என்பவர், கடந்த (22.11.2026) அன்று தனது மகன் சையது அராபத் மற்றும் உறவினர் முகமது உமர் பாரூக் ஆகியோருடன் காரில் சிறுமலைக்குச் சென்றுவிட்டு, மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குப் பின்னால் மற்றொரு காரில் வந்த பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த தயாநிதி (21). உதயநிதி (20). லோகேஷ் (23). விக்னேஷ் (20). மற்றும் அவர்களது நண்பர்கள் இருவர், மதுபோதையில் தங்களுக்கு வழிவிடக் கோரி தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சௌகத் அலியின் காரை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல், ஒத்தக்கண் பாலம் அருகே தங்களது காரால் அவரது காரின் பின்புறம் மோதி வழிமறித்துள்ளனர். பின்னர், சௌகத் அலி மற்றும் அவரது மகன் சையது அராபத் ஆகிய இருவரையும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், கடந்த (23.11.2026) அன்று திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட பொறுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கப்பாண்டியன் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், (24.11.2026) தயாநிதி, உதயநிதி, லோகேஷ், விக்னேஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















