காரைக்குடி மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதியான ஓ. சிறுவயல் சாலை வழியில் அமைந்துள்ள அண்ணாமலைபுரம் பகுதியில், கடந்த பல நாட்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள சாலை.
இப்பகுதி சாதாரண குடியிருப்பு பகுதி மட்டுமல்லாமல், மிக முக்கியப் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்தச் சாலை வழியாகத்தான் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO Office), தீயணைப்புத்துறை அலுவலகம் மற்றும் முக்கியத் தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன.
பள்ளி செல்லும் குழந்தைகள், அரசு அலுவலகங்களுக்கு வரும் முதியவர்கள் எனப் பலரும் இந்தத் துர்நாற்றத்தாலும், சுகாதாரச் சீர்கேட்டாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரிகளின் கவனக்குறைவா? ஆட்கள் பற்றாக்குறையா? நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த முக்கியச் சாலையில், இத்தனை நாட்களாகக் குப்பைகள் தேங்கிக் கிடப்பது அதிகாரிகளின் கவனக்குறைவா அல்லது துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குப்பைகள் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு போன்ற நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. எனவே, பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மீது அக்கறை கொண்டு, மாநகராட்சி நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, அண்ணாமலைபுரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















