கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி டவுன்ஹாலில் நடந்தது. பேரணியை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காவல் ஆய்வாளர் திரு.சரவணன், உதவி -ஆய்வாளர்கள் திரு.சக்திவேல், திரு.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் போக்குவரத்து காவல்துறையினர், ஆயுதப்படை காவல்துறையினர், ஊர்க்காவல்படையினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி சென்றனர்.
பேரணி பாரதிசாலை, அண்ணாபாலம், இம்பீரியல் சாலை, வண்டிப்பாளையம், ரெயில்வே சுரங்கப்பாதை, லாரன்ஸ்ரோடு வழியாக வந்து மீண்டும் டவுன் ஹாலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதால் உயிரிழப்பை தடுக்கலாம், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை வழங்கினர்.
இது பற்றி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் கூறுகையில், கடலூர் உட்கோட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நகரில் விபத்துகள் குறைந்து வருகிறது. விபத்து ஏற்படும் போது தலையில் அடிபட்டு தான் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள். இதை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து தான் இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்றார்.