கடலூர்: கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தை உண்டாக்கும் நோக்கில் மரணத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர்கள், செல்போன் பேசிய படி வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் இது வரை அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய 17 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 205 பேர், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய 17 பேர், வாகன விபத்தினால் மரணம் விளைவித்த 85 பேர், வாகனங்களில் அதிக அளவில் சரக்கு ஏற்றி செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் என 348 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும். எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.