மதுரை: மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கீழப்பட்டி அருகே 2000 ஆண்டு பழமையான சமணர் மலை அடிவாரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற அரசை வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க முதலைக்குளம் கல்வெட்டுப் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலைக்குளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் அமைந்துள்ள இப்பகுதிக்கு மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்றனர். டாஸ்மாக் கடையால் அப்பகுதியின் பாதுகாப்புக்கும் ஆய்வுப் பணிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, அடுத்த கிராம சபைக் கூட்டத்திற்கு முன்பாகவே கடையை முழுமையாக அகற்ற வேண்டும் என கிராம நிர்வாகம், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்தி தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















