கடலூர்: கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி சிதம்பரம் பொய்யாப்பிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் பாலகிருஷ்ணன்(37) என்பவர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிவா(எ)சிவராஜ் (21) என்பவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.500 பறித்த வழக்கில் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கர் வழக்கு பதிவு செய்து, சிவாவை கைது செய்தார். இதை தொடர்ந்து சிவா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில், சிவா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் கடலூர், விழுப்புரம், மற்றும் சென்னை பகுதி காவல் நிலையங்களில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிவாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதேபோல், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி ஆலடி காவல் நிலைய எல்லை பகுதியில் முத்தனகுப்பம் பேருந்து நிறுத்தத்தில், அதே ஊரை சேர்ந்த ராஜ்கண்ணு மகன் கொளஞ்சி (42) நின்று கொண்டிருந்த போது, மாரிமுத்து (27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தார்.
இது குறித்து ஆலடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். விசாரணையில், மாரிமுத்து மீது பல்வேறு வழிப்பறி, கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து எஸ்பி விஜயகுமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் மாரிமுத்துவை கைது செய்ய ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார்.