காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்து இறந்து போன ரவுடி ஸ்ரீதரின் முக்கிய கூட்டாளிகளான பிரபல ரவுடி தினேஷ் ( எ ) தினேஷ் குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட சுமார் 30 வழக்குகளும் மற்றும் பிரபல ரவுடி தியாகு (எ) பொய்யாகுளம் தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட சுமார் 61 வழக்குகள் உள்ளன.
இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் மிகப் பெரிய ரவுடியாக உருவாக்கும் நோக்கில் காஞ்சிபுரத்தில் உள்ள பொதுமக்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி பணம் பறித்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட வந்தவர்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிவகாஞ்சி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்து சுமார் நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்துகொண்டு, தொடர்ந்து பொதுமக்களை வணிக நிறுவனங்களை தொலைபேசி மூலம் அச்சுறுத்தி மிரட்டி கட்டப்பஞ்சாயத்து மூலம் பணம் பறித்து பிடிக்கமுடியாமல் இருந்துவந்தனர்.
மேலும் இந்த ரவுடிகள் சாதாரணமான நிலையில் இருந்து கொண்டு பொது மக்களை அவ்வப்போது அச்சுறுத்தி பணம் பறித்து பெரிய அளவில் வளர்ந்துவந்தனர். இவர்களை பிடிக்க தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தேடிக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே கைது செய்து பெயிலில் வெளியே வந்த ரவுடிகள் மீண்டும் பலரை மிரட்டி வந்தனர். இந்த காஞ்சிபுரம் ரவுடிகள் சென்னை, கடலூர், ரெட்டில்ஸ், திருவள்ளூர் போன்ற மாவட்டத்தில் இருக்கும் முக்கிய குற்றவாளிகளோடு தொடர்பு ஏற்படுத்தி உள்ளார்கள். எனவே இவர்கள் சேர்ந்து நடமாடிக் கொண்டும் பல்வேறு மாவட்டங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சில செயல்களை செய்து வருகின்றனர். எனவே காவல்துறை தலைவர் வடக்கு மற்றும் திரு.P.நாகராஜன்,இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. காவல்துறை துணைத் தலைவர், காஞ்சிபுரம் சரகம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் திருமதி.தெ.சண்முகப்பிரியா காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் அவர்களின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு மகாராஷ்டிரா, கோவா போன்ற இடங்களில் இவர்கள் பதுங்கி இருப்பதை கண்டறிந்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்களில் கடலூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த பிரபல சரித்திர பதிவேடு ரவுடி சுரேந்தர் என்பவர் மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உட்பட்ட 20 வழக்குகளும் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த ரெட் ஹில்ஸ், காந்தி நகரை சேர்ந்த பிரபல ரவுடிகள் 1) சேது (எ) சேதுபதி என்பவர் மீது 4 கொலை வழக்குகளும், 4 கொலை முயற்சி வழக்குகளும், 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன 2) சுரேஷ்வரர் என்பவர் மீது ஒரு கொலை கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வழக்கை உட்பட்ட பல வழக்குகள் உள்ளதால் கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தொடர் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.மற்ற ரவுடிகள் மீது காஞ்சிபுரம் நகரில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மேற்படி ரவுடிகளை கூண்டோடு கைது செய்த தனிப்படையினரை உயர் அதிகாரிகள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கும் பொதுமக்கள், நில விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.















