நாகப்பட்டினம் : இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரவு வழியை உடையது. இவரது தாயார் பிரபாவதி தேவி ‘தத்’ எனும் பிரபுக் குலத்திலிருந்து வந்தர். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக இவர் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்தபடியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய், தந்தையரைவிட தன்னை கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியை காதலித்து, 1937 டிசம்பர் 27-ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்துவிட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.
1992-ல் சுபாஷ் சந்திரபோஸுக்கு இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது. எனவும் மேலும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு மத்தியில் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நாம் அனைவராலும் நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் என்ற மகத்தான தேசிய தலைவரை நாம் சிரம் தாழ்ந்து போற்றுதல் வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.