மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தீவிரமாக கண்காணித்து தண்டனை பெறச் செய்வதற்காக ‘நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு’ (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் வழக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம், கருப்பாயூரணி காவல் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் சம்பத் குமார் (62). பரமசிவம் (45). சேகர் (52). ராம் குமார் (35), பூமிநாதன் (35). ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை 3rd ADJ CUM PCR நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும், இந்த வழக்கில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, துரிதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரி மற்றும் நீதிமன்ற பெண் காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.




















