கடலூர்: விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த ஈஸ்வரன், சென்னை தாம்பரம் துணை காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று விழுப்புரத்தில் பயிற்சி பெற்று வந்த கேரளாவை சேர்ந்த தீபா சத்தியன் விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
புதிதாக பொறுப்பேற்ற தீபா சத்தியன், ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது அவரை விருத்தாசலம் உட்கோட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள், உதவி-ஆய்வாளர்கள், சிறப்பு உதவி-ஆய்வாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உதவி காவல் கண்காணிப்பாளர் தீபா சத்தியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கை முழுவீச்சில் பாதுகாப்பதே எனது முதல் பணி. தற்போது கஞ்சா பழக்கத்திற்கு 18 வயதுக்கு குறைந்தவர்கள் அடிமையாகி வருகின்றனர். கஞ்சா பழக்கத்தில் இருந்து சிறுவர்களை மீட்கும் வகையில் விருத்தாசலம் சரகத்தில் கஞ்சா விற்பனையை முழுவதும் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் உடன் தகவல் தெரிவிக்கலாம். கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வழக்குகளும் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.