மதுரை: மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த மறுக்கும் நகராட்சி பொறியாளரைக் கண்டித்து – நகர் மன்ற உறுப்பினர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் கடந்த சில மாதங்களாக முறையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. நகர் மன்ற கூட்டங்கள் நடைபெறாத காரணத்தால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படையில் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அலுவலகத்தில் பணியாற்றும் கடைநீலை ஊழியர்களுக்கு கூட சம்பளம் வழங்கப்படாத நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நகர் மன்ற கூட்டத்தை நடத்த கோரி நகராட்சி பொறியாளர் சசிக்குமாரிடம் நகர் மன்ற உறுப்பினர்கள் பலமுறை முறையிட்டும் காலம் தாழ்த்திக் கொண்டே செல்வதாக குற்றம் சாட்டி, இன்று நகராட்சி அலுவலகம் முன்பு நகர் மன்ற துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் அனைத்து கட்சியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்களும் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, விரைந்து வந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய், நகராட்சி அலுவலர்களிடமும், நகர் மன்ற உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 10 ஆம் தேதி நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என, அறிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















