சென்னை : சென்னை, கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் (வ/24) என்பவர் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சக்திவேலின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அந்தப்பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் (எ) மெட்ரோ என்பவரின் சகோதரர் சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இதனால் சக்திவேல் குடும்பத்தினருக்கும், ஶ்ரீதர் (எ) மெட்ரோ குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஶ்ரீதர் (எ) மெட்ரோ கடந்த 07.062022 அன்று மேற்படி சக்திவேலை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை பேசி தீர்த்துகொள்வோம் என்று கூறி வில்லிவாக்கத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய சக்திவேல் அன்றைய தினம் மதியம் சுமார் 02.00 மணியளவில் வில்லிவாக்கத்திற்கு வந்து ஶ்ரீதர் (எ) மெட்ரோ மற்றும் அவரது நண்பர் தங்கவேல் ஆகிய இருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ஶ்ரீதர் (எ) மெட்ரோ மற்றும் தங்கவேல் சேர்ந்து சக்திவேலை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். காயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சக்திவேலின் தாயார் மேற்படி சம்பவம் குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 1) தங்கவேல் (வ/24) வில்லிவாக்கம், சென்னை 2) ஶ்ரீதர் (எ) மெட்ரோ (வ/24) வில்லிவாக்கம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.