சென்னை : சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்த குணசுந்தரி (28), என்பவருக்கு திருமணமாகி 7 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், முதல் கணவர் இறந்து விட்டதால், தனது உறவினரான டேஞ்சர் (எ) டேவிட் (எ) ராஜீவ் என்பவரை 2வது திருமணம் செய்து, வாழ்ந்து வந்துள்ளார். 6 மாத கர்ப்பிணியான குணசுந்தரியின் நடத்தையில் சந்தேகமடைந்த 2வது கணவர் டேஞ்சர் (எ) டேவிட் (எ) ராஜீவ், கடந்த (15.11.2014), அன்று அதிகாலை தனது மனைவி குணசுந்தரி மற்றும் குணசுந்தரியின் முதல் கணவரின் 7 வயது மகனை, கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். மேலும் இதனை தடுக்க வந்த மாமியார், நாகவள்ளி என்பவரையும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து குணசுந்தரியின் சகோதரர் நித்தியானந்தம், என்பவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், கொடுத்த புகாரின் பேரில், கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்யப்பட்டது.
புதுவண்ணாரப் பேட்டை காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர், மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை, பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் மேற்படி இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இன்று (24.05.2022), புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலையில் உள்ள அரசு பால்டெக்னிக் கல்லூரி அருகே, நடந்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை காவல் குழுவினர், விரைந்து சென்று, மேற்படி இரட்டை கொலை வழக்கில், சம்பந்தப்பட்டு 8 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த டேஞ்சர் (எ) டேவிட் (எ) ராஜீவ் (46), ஆந்திரமாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி குற்றவாளி, மீது நீதிமன்ற நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, தலைமறைவாக குற்றவாளியை, கைது செய்த தனிப்படை காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் உயரதிகாரிகள், வெகுவாக பாராட்டினர்.