திருச்சி: திருச்சி கொள்ளிடம் அருகே தலைமுடி விக் (Wig) சென்டருக்கு வழிகாட்டுவதாகக் கூறி, கனடாவில் இருந்து வந்திருந்த நபர்களை விடுதிக்கு அழைத்துச் சென்று கத்திமுனையில் கட்டிப்போட்டு பணம், நகைகளைப் பறித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். சம்பவத்தின் பின்னணி. திருச்சி திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்களும், கனடாவில் இருந்து வந்திருந்தவர்களுமான சபரிராஜன், பிரசாத் மற்றும் ராம் பிரசாத் ஆகியோர் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி மாலை 4 மணியளவில் கொள்ளிடம் ரவுண்டானா அருகே தலைமுடி விக் தொடர்பான சேவையைப் பெறுவதற்காக விக் சென்டரைத் தேடி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், தங்களுக்கு விக் சென்டர் இருக்கும் இடம் தெரியும் என்று ஆசைவார்த்தை கூறி, பிரசாத் மற்றும் சபரிராஜனை அருகிலுள்ள MRL லாட்ஜிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்குள்ள அறையில் ஏற்கனவே பதுங்கியிருந்த மேலும் 4 பேருடன் சேர்ந்து, இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்த ரூ.1,00,000 ரொக்கப் பணம், தங்கச் செயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட சுமார் 6½ பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்ட கும்பல், மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றது. தனிப்படை தீவிர விசாரணை & ஆட்டோ சோதனை. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க துறையூர் காவல் ஆய்வாளர் கருணாகரன், கொள்ளிடம் காவல் ஆய்வாளர் வீரபாண்டி, சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர்கள், காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அக்டோபர் 11 காலை 9.30 மணியளவில் பனமங்கலம் அருகே வள்ளி மருத்துவமனை முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆட்டோவை போலீசார் சோதனையிட முயன்றனர்.
அப்போது அதிலிருந்த 6 பேரில் ஒருவர் தப்பியோடினார். அவரை விரட்டிப் பிடிக்க முயன்றபோது கொள்ளிடம் காவல் ஆய்வாளர் வீரபாண்டி கீழே தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டது. இருப்பினும், சுதாரித்துக் கொண்ட மற்ற போலீசார் ஆட்டோவில் இருந்த 5 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். 5 பேர் கைது – தப்பியோடியவருக்கு வலைவீச்சு.
விசாரணையில் பிடிபட்டவர்கள். ஸ்ரீதர் (எ) ராமச்சந்திரன் (திருச்சி மலைக்கோட்டை) நசுருதீன் (அரியமங்கலம் பாத்திமாபுரம்) அசார் முஹம்மது (அரியமங்கலம் காமராஜ் நகர்) சேதுபதி (காஜாப்பேட்டை) யாக்கோப் ஸ்டாலின் (புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம்) இவர்கள் ஐவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். தப்பியோடிய அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட ரூ.1,00,000 பணம், 6½ பவுன் நகைகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
காவல்துறைத் தலைவர் பாராட்டு. புகார் கிடைத்த சில மணி நேரங்களிலேயே துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்து, பணம் மற்றும் நகைகளை மீட்ட தனிப்படையினரின் சிறப்பான சேவையைப் பாராட்டி, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (IGP) திரு. V. பாலகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.




















