திருச்சி : கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த சூழலில் உறவினர்களைக் கூட தொட்டு உதவுவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று மரத்தடி ஓரம் முடியாமல் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் திருச்சி உறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. மணிராஜ். திருச்சி அரசு மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மருந்தகம் எதிரே இருந்த மரத்தடி மண்ணில் படுத்து எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து உதவிய காவல் ஆய்வாளர், அருகில் இருந்த டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்து அவருக்கு கொடுத்ததோடு, மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் சொல்லி அவரை சிகிச்சைக்கு ஸ்ட்ரக்சர் கொண்டு வரச்சொல்லி அனுப்பி வைத்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மற்றுமொரு பெண் காவலரும் இணைந்து உதவினார். கொரோனா நோய் தொற்றினால் ஒருவருக்கு ஒருவர் அருகில் நிற்கவே அச்சப்படும் சூழலில், மரத்தடி ஓரம் கிடந்த பெண்ணை மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளரின் செயல் காண்போரை நெகிழச் செய்தது.
இந்த மனிதாபிமான மிக்க செயலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.