திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேணு உணவகம் அருகே 19.09.2020 அன்று சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜசேகர் என்பவர் தனது காரை நிறுத்திவிட்டு உணவருந்த சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது கார் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லேப்டாப் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நகர் தெற்கு காவல் நிலையத்தில் சாலமன் ராஜசேகர் புகார் கொடுத்தார்.
புகாரை தொடர்ந்து. நகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்களின் தலைமையில் நிலைய SIதிரு.ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் நகர் குற்றத்தடுப்பு பிரிவு SSI திரு.நல்லதம்பி, SSIதிரு.வீரபாண்டி, தலைமை காவலர்கள் திரு.ஜார்ஜ் எட்வர்ட், திரு.ராதாகிருஷ்ணன், திரு.முகமது அலி, முதல் நிலை காவலர் திரு.விசுவாசம் ஜெயராஜ் மற்றும் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.வீரமணி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வந்ததில் காரின் கதவை உடைத்து உள்ளே இருந்த நகைகள் மற்றும் லேப்டாப்பை திருடியது திருச்சியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சஜிவ் என்பவர்களென தெரியவந்து, விரைந்து சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கிருஷ்ணன்