தூத்துக்குடி: கடந்த சில நாட்களாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ், தலைமை காவலர் திரு.பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மாணிக்கராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், வடபாகம் காவல் நிலைய காவலர் திரு.மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு.மணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு.முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
மேற்படி தனிப்படையினர் இன்று (30.06.2021) அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பொன்ராஜ் (48) என்பவருக்கு சொந்தமான மளிகை கடை முன்பு 16, 17 வயதுடைய இளஞ்சிறார்கள் 3 பேர் கடையில் திருடும் நோக்கத்தோடு கையில் கம்பி, சுத்தியல் போன்ற ஆயுதங்களுடன் நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே தனிப்படையினர் மேற்படி மூன்று இளஞ்சிறார்களை கைது செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட இளஞ்சிறார்களில் இருவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் 11 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.