திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைப்பிரிவை இன்று (26.12.2022) திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்கள், 2022 – ம் ஆண்டுக்கான ஆய்வை மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
பின் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து (Parade), பின் ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த ஆய்வின் போது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.