திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த தளவாய் அவர்களின் வாட்சப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி செய்தி அனுப்பப்பட்டு, அதன் மூலம் ரூ.7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இது சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தென்மண்டல காவல் துறைத் தலைவர் மற்றும் நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, ஆய்வாளர்கள் திரு.ராஜ், திரு.சந்திரமோகன், உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த (23.08.2022)-ம் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திரா, சித்தூரைச் சேர்ந்த முரளி (41) மற்றும் வினய்குமார் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கிலும், இவ்வழக்கிலும் ஒரே மாதிரியாக மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்ததால் அவ்வழக்கில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன்சோகாசர் 32. மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி 40. ஆகியோர் பெங்களூரில் இருந்து இம்மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால், ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் பெங்களூர் சென்று இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் குற்றவாளி கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.