தூத்துக்குடி: கொரோனா பரவல் அதிகரித்துவருவதை அடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பது அதிகரிக்க தொடங்கியுள்ளதுகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஆங்கங்கே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருபவர்கள் கைது செய்யபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் மேட்டுகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் தனியார் காம்பளக்சில் செயல்பட்டு வரும் மொத்து மருந்து விற்பனை கடை ஒன்றில் ரெம்டெசிவிர் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையெடுத்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து 42 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காந்தி நகரைச் சேர்ந்த சண்முகம், அவது சகோதர் கணேசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, நெல்லையில் யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்தும், இதன் பின்னால் இருக்கும் கும்பல் குறித்தும் போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.