தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பல்வேறு தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்கள் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கரன் தலைமையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சங்கர், திரு. பெரியநாயகம், தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. கலைவாணர், முதல் நிலை காவலர் திரு. நாசர், காவலர் திரு. ராஜலிங்கம் ஆகியோர்
அடங்கிய தனிப்படையினர் இன்று (06.06.2021) சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டயாபுரம் ரோட்டில் ரோந்து சென்ற போது தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் என்ற காடை காளியப்பன் (25), தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரித்தங்கம் (20) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் நாராயணன் என்ற லெட்சுமி நாராயணன் (21) ஆகியோர் அரிவாள்களுடன் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில்,அவர்கள் இன்று எட்டயாபுரம் ரோட்டில் ஒருவரை வழிமறித்து செல்போனை கொள்ளையடித்துள்ளதும், மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அவர்களை கைது செய்து, அவர்கள் கொள்ளையடித்த செல்போனையும், அவர்கள் வைத்திருந்த 4 அரிவாள்கள் மற்றும் அவர்களுடைய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.