மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த (03.08.2024)ம் தேதி மதுரை மாவட்ட சரக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை ஆம்பிளிபயர் குறைந்த விலைக்குத் தருவதாக கூறி, பேஸ்புக்கில் போலியாக விளம்பரம் செய்து, செல்போனில் பேசி, பணம் ரூ.10,000/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றி ஆம்பிளிபயர் தராமல் பணமோசடி செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் ஆம்பிளிபயர் குறைந்த விலைக்குத் தருவதாக கூறி பேஸ்புக்கில் போலியாக விளம்பரம் செய்து செல்போனில் பேசி பணம் ரூ.10,000/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர்கள் தேனி மாவட்டம் எரசநாயக்கன்பட்டியை சேர்ந்த சாமிதாஸ் மகன் விஜய் மற்றும் கோடங்கிபட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் ராம்குமார் என்பதும் தெரிய வந்தது. மேற்படி குற்றவாளிகளை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குற்றவாளிகள் இருவரும் மதுரை மாநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களை ஆசைவார்த்தை கூறி சிறிது சிறிதாக ரூ.1,00,000/-வரையில் பணம் பெற்று ஏமாற்றி கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளி யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் அல்லது இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்