அரியலூர் : அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (50), இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி (44), எழிலரசி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை நேரத்தில் அவரது வீட்டிற்கு சுமார் (50) வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார். மாவிலை பறித்து தரும்படி அவர் எழிலரசியிடம் கேட்டுள்ளார். தனது வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெற இருப்பதாகவும், அதற்காக தோரணம் கட்ட மாவிலை தேவைப்படுவதாகவும் கேட்டுள்ளார். அதை நம்பிய எழிலரச, எதிர்வீட்டின் அருகே சென்று மாவிலையை பறித்து வந்து, அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அந்த நபர் தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் எழிலரசி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பீரோவில் இருந்த சுமார் 8 பவுன் நகைகளை அந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் எழிலரசி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.திருவேங்கடம் வழக்குபதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்