தூத்துக்குடி: தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 65. மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய நண்பர் இசக்கிமுத்து, தினமும் மாலையில் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மது அருந்திய போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இசக்கிமுத்து செல்போனை முத்துகிருஷ்ணன் பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தான் இடுப்பில் வைத்திருந்த அரிவாளால் முத்துக்கிருஷ்ணனை தலையில் வெட்டியுள்ளார். பதிலுக்கு முத்துக்கிருஷ்ணன் தாக்கியதில் இசக்கிக்கு பலத்த காயம்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இதைத்தொடர்ந்து, முத்துக்கிருஷ்ணன் நிலைகுலைந்து ரோட்டில் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முத்துகிருஷ்ணனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.