தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், டவுண் டி.எஸ்.பி திரு.கணேஷ் மேற்பார்வையில் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திரு.வேல்ராஜ், மற்றும் போலீசார் துறைமுகம் கடற்கரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மகேந்திரா வேனில் இருந்து, கடற்கரையில் நின்றுகொண்டிருந்த படகிற்குள் மஞ்சள் மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த சிலர் போலீசாரைக் கண்டதும் கடலுக்குள் நீந்தி தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து போலீசார் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், வேன் டிரைவர் தூத்துக்குடி சிலுவைபட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள் (36), கிளீனர் சுனாமி காலனியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா (19) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுக்குள் நீந்தி சென்ற கீழ வைப்பாறைச் சேர்ந்த அருள் மகன் ராபின்சன் (21), ஜேசு மகன் விதுஸ்டன் (20), செல்லையா மகன் அருள் (55) ஆகிய மூவரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
மேலும் வேன், படகு மற்றும் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் மஞ்சள் மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து சுங்க இலகாவிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.