தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மிகவும் முக்கிய தொழில் தீப்பெட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு தீப்பெட்டி ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தினால் தீ விபத்துனை தடுக்கும் வகையில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக காவல்துறை, தீயணைப்புதுறையினர் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கிழக்கு காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு டி.எஸ்.பி.திரு. உதயசூரியன் தலைமை வகித்தார்.
இதில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை சார்பில் தீப்பெட்டி ஆலைகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதே போன்று தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் தீ விபத்து தடுப்பது தொடர்பாகவும், தங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.