திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட சரகத்திற்கு உட்பட்ட வள்ளியூர்,பணகுடி, பழவூர், இராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக புகார் காவல் நிலையங்களுக்கு வந்ததன் பேரில் மேற்படி திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. யோகேஷ்குமார், அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சாகுல்ஹமீது அவர்கள் மற்றும் வள்ளியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.ஸ்டிபன் ஜோஸ், அவர்கள் காவலர்கள் சுரேஷ் மற்றும் லுர்து டேனியல் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வள்ளியூர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி புதூரைச் சேர்ந்த சுனில் (18), செல்வன் (32), மற்றும் கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்த ஜெபாஸ்டின் (23), ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 12 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 22 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேற்படி காவல் துறையினர் விசாரணையில் திருடப்பட்ட வாகனங்கள் வள்ளியூர்,பழவூர், நெல்லை மாநகரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த வள்ளியூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.