மதுரை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சிறுகாய வழக்குகள், சந்தேக மரண வழக்குகள், சாலை விபத்து வழக்குகள் மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகள் தொடர்பாக விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட காவலர்களுக்கான இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் இன்று மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கியது. இப்பயிற்சி முகாமை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அர்விந்த், ஐ.பி.எஸ்., அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சியில் 50 காவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில் மதுரை சரக காவல் துணைத் தலைவர் டாக்டர் அபினவ்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் கலந்து கொண்டு காவலர்களுக்கு சட்ட நடைமுறைகள் குறித்தும், வழக்குத் தீர்வில் காலதாமதம் இன்றி செயல்படுவதன் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த புத்தாக்கப் பயிற்சி முகாம் அனைத்து வாரங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மூலம் காவலர்களின் தொழில்முறை திறன் மேம்பட்டு, வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















