திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் கடந்த 30 நாட்களில் மட்டும் திருநெல்வேலி மாநகரத்தில் கஞ்சா விற்பனை குற்றம் சம்பந்தமாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 18.335 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்களில் 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநகரில் சட்டவிரோதமாக மது விற்றதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,521 மது பாட்டில்கள்(262 லிட்டா்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா போன்ற போதைப் பொருகள்கள் விற்பனை செய்பவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா், முனைவர். நெ.மணிவண்ணன் இ.கா.ப. எச்சரித்துள்ளார். அவர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற போது மாநகரில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















